Archives: ஜூன் 2022

மற்றவர்களுடன் நடப்பது

பில்லி, ஒரு அன்பான மற்றும் விசுவாசமான நாய். 2020 இல் இணையதள நட்சத்திரமாக மாறியது. அதின் உரிமையாளர் ரஸ்சல் கணுக்கால் உடைந்து, ஊன்றுகோலைப் பயன்படுத்தி நடந்துகொண்டிருந்தார். பில்லியும் அதின் உரிமையாளருடன் நடக்கும்போது நொண்டி நடக்க தொடங்கியது. கவலையடைந்த ரஸ்சல், பில்லியை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் நாய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறினார்! அது தானாக நடக்கும்போது நன்றாகவே நடக்கிறது. அது தன் உரிமையாளருடன் நடக்கும்போது மட்டும் போலியாக நொண்டுகிறது என்று கண்டறிந்தனர். இதைத்தான் மற்றவர்களுடைய வலியை உணருவது என்று நாம் அழைக்கிறோம்.

ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலரின் ஆலோசனைகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பத்துக் கட்டளைகளில், கடைசி ஐந்து கட்டளைகளை அவர் சுருக்கிக் கூறுகிறார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (ரோமர் 13:9). 8ஆம் வசனத்திலும் மற்றவர்களுடன் நடப்பதன் முக்கியத்துவத்தை நாம் பார்க்கலாம்: “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்.”

எழுத்தாளர் ஜென்னி ஆல்பர்ஸ் அறிவுரை கூறுகிறார்: “ஒருவர் உடைந்திருக்கும்போது, அவர்களை சரிசெய்ய முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). யாராவது வேதனையிலிருக்கும்போது, அவர்களின் வலியைப் போக்க முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). மாறாக, அவர்களுடைய வலியில் அவர்களை நேசித்து, அவர்களோடு சேர்ந்து நடக்க முயற்சியுங்கள் (அது உங்களால் முடியும்). ஏனெனில் சில சமயங்களில், அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதே மக்களுக்கு அவசியமான ஒன்று.”

நம்முடைய இரட்சகராகிய இயேசு, நம்முடைய காயங்கள் மற்றும் வேதனைகளில் நம்மோடு நடப்பதால், மற்றவர்களுடன் நடப்பது என்றால் என்ன என்பதை நம்மால் அறியமுடியும்.

இருண்ட தருணங்கள், ஆழ்ந்த ஜெபங்கள்

“எனக்கு ஒரு இருண்ட தருணம் இருந்தது.” இந்த ஐந்து வார்த்தைகள் கோவிட்-19 தொற்று பரவிய நேரத்தில், ஒரு பெண் பிரபலத்தின் உள் வேதனையைப் படம்பிடிக்கின்றது. இந்த புதிய வாழ்க்கை முறையை தழுவுவது அவளுக்கு சவாலாய் அமைந்தது. அவள் தற்கொலை எண்ணங்களோடு போராடினாள் என்று அவரே சொன்னார். இந்த இக்கட்டான மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு, தன் மீது அக்கறைகொண்ட ஒரு நண்பரிடம் தன்னுடைய நிலையை மனம்விட்டு பகிர்ந்துகொண்டதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாம் அனைவரும் இதுபோன்ற பரபரப்பான தருணங்கள், நாட்கள் மற்றும் பருவங்களை சந்திக்க நேரிடுகிறது. பள்ளத்தாக்குகள் மற்றும் கடினமான இடங்கள் நமக்கு புதிதல்ல, ஆனால் அதை மேற்கொண்டு வெளிவருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சில வேளைகளில் மனநல நிபுணர்களின் உதவியை நாடுவதும் அவசியப்படுகிறது.

சங்கீதம் 143 இல், தாவீது தன்னுடைய வாழ்வின் ஒரு இருண்ட தருணத்தின் ஜெபத்தைக் கேட்டு அதின் மூலம் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். சரியான சூழ்நிலை எதுவென தெரியவில்லை. ஆனால் தேவனிடம் அவர் ஏறெடுத்த ஜெபங்கள் அனைத்தும் நேர்மையானவை, நம்பிக்கையானவைகள். “சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது” (வச. 3-4). விசுவாசிகளுக்கு, நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நமக்குள்ளேயோ, அல்லது நண்பர்களிடமோ அல்லது மருத்துவ நிபுணர்களிடமோ பகிர்ந்துகொள்வது மட்டும் போதாது. சங்கீதம் 143:7-10-ல் காணப்படும் விண்ணப்பங்களை உள்ளடக்கிய ஜெபங்களுடனும் முழு சிந்தையுடனும் நாம் தேவனிடம் வர வேண்டும். நமது இருண்ட தருணங்கள், தேவனால் மட்டுமே கொடுக்கக்கூடிய ஒளியை எதிர்நோக்கும் ஆழமான ஜெப நேரங்களாகவும் இருக்கலாம்.

சிலுவையின் செய்தி

முகேஷ், “கடவுள் இல்லை, மதம் இல்லை, எதுவும் இல்லை” என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர். தன்னுடைய மக்களுக்கு ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தேடி, அமைதியான போராட்டங்களில் மாணவர்களை வழிநடத்த உதவினார். ஆனால் அவர் தலைமை தாங்கிய போராட்டங்கள் அரசாங்கத்தின் குறுக்கீட்டை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாய் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் அவலம் நேர்ந்தது. அந்த அசம்பாவிதத்தினால் முகேஷின் பெயர் நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றது. ஒரு குறுகிய சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் ஒரு வெளியூர் கிராமத்திற்குத் தப்பிச் சென்றார். அங்கு அவர் ஒரு வயதான விவசாய பெண்மணியை சந்தித்தார். அவர் இவருக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தினார். கைகளால் எழுதப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் நகல் மட்டுமே அவரிடம் இருந்தது. ஆனால் அவருக்கு படிக்கத் தெரியாது. அதை முகேஷிடம் கொடுத்து படித்துக் காட்டுமாறு கூறி, அவர் அதை படிக்க படிக்க, அதை முகேஷிக்கு விளக்கிச் சொன்னார். சரியாய் ஒரு வருடம் கழித்து, முகேஷ் இரட்சிக்கப்பட்டார்.

தான் கடந்த வந்த கடினமான பாதைகளிலும் தேவன் அவரை சிலுவையண்டை நடத்துவதற்கு அவரை பெலப்படுத்தியதை அவரால் உணரமுடிந்தது. பவுல் அப்போஸ்தலர் 1 கொரிந்தியரில் “சிலுவையைப்பற்றிய உபதேசம். . . தேவபெலன்” (1:18) என்று சொன்னதை அவர் நேரில் அனுபவிக்க முடிந்தது. முட்டாள்தனம், பலவீனம் என்று பலர் கருதியது முகேஷின் பலமாக மாறியது. நாம் கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பு, நம்மில் சிலருக்கும் இதே சிந்தை இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆவியானவரின் மூலம், தேவனின் வல்லமையும் ஞானமும் நம் வாழ்வில் நுழைவதையும், அது கிறிஸ்துவண்டை நம்மை வழிநடத்துவதையும் உணர்ந்தோம். இன்று சிலுவையின் உபதேசத்தை அநேகருக்கு போதிக்கும் போதகராய் முகேஷ் ஊழியம் செய்கிறார்.
கடினமான இருதயங்களைக் கூட மாற்றும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு. இன்று அவருடைய வல்லமையான தொடுதல் யாருக்கு தேவை?

கடுமையான நடவடிக்கைகள்

எங்கள் வீட்டு சுவரில் அலங்கரிக்கப்பட்ட ஒரு வில் மற்றும் அம்பு, பல ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருந்தது. நானும் என் தந்தையும் ஒரு பழங்குடி மக்கள் மத்தியில் மிஷனரிகளாய் பணியாற்றியபோது, அவர்களிடமிருந்து நினைவுப்பரிசாய் அவைகளைப் பெற்றோம்.
அங்கு பழக்கமான ஒரு நபர் எங்களை சந்திக்கும்படி வந்திருந்தார். வில்லைக் கண்டதும் அவர் முகநாடி சற்று வேறுபட்டது. அதில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய பொருளை சுட்டிக்காண்பித்து, “அது ஒரு மாயாஜால வஸ்து. அதற்கு சக்தி இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதை என் வீட்டில் வைக்கமாட்டேன்" என்று அவர் கூறினார். விரைவாக, வில்லில் இருந்து அந்த வஸ்தை வெட்டி அப்புறப்படுத்தினோம். தேவனைத் தவிர்த்து, வேறு எந்த வழிபாட்டு வஸ்துக்களும் எங்கள் வீட்டில் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை.

எருசலேமின் ராஜாவாகிய யோசியா, தேவன் தன் ஜனத்திடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் குறித்து அதிகம் அறியாதவராய் வளர்ந்தார். வெகுகாலமாய் பராமரிக்கப்படாத ஆலயத்தில் (2 இராஜாக்கள் 22:8) கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்க விரும்பினான். விக்கிரக ஆராதனையைக் குறித்த தேவனுடைய சிந்தையை அறிந்தமாத்திரத்தில், யூதேயா தேசமனைத்தையும் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் வரையறைகளுக்கு உட்படும்பொருட்டு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தான். சாதாரண வில்லிலிருந்த அந்த மாயாஜால வஸ்துக்களை வெட்டியெறிவதை விட கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தினான் (காண்க 2 இராஜாக்கள் 23:3-7).

யோசியா ராஜாவிடமிருந்த நியாயப்பிரமாண புத்தகத்தைக் காட்டிலும் இன்று விசுவாசிகளிடம் அதிக அதிகமாய் இருக்கிறது. நம்மை வழிநடத்தும் முழு வேதாகமம் நம்மிடம் உள்ளது. உற்சாகப்படுத்தும் நபர்கள் இருக்கிறார்கள். சிறியதோ அல்லது பெரியதோ, எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியின் நிரப்புதல் நம்மிடம் இருக்கிறது.

தேவையை சந்திக்கும் செல்வம்

பள்ளிகளின் மதிய உணவு கேண்டீன்கள், தேவையை சரியாகக் கணிக்க முடியாததால், அளவுக்கதிகமான உணவைத் தயாரிக்கின்றன. மீதமுள்ள உணவுகள் குப்பையில் கொட்டப்படுகிறது. இன்னும் வீட்டில் சாப்பிடுவதற்கு போதிய உணவு கிடைக்காமல், வாரயிறுதி நாட்களில் பட்டினி கிடக்கும் மாணவர்கள் ஏராளம். ஒரு மாவட்டத்தின் பள்ளி நிர்வாகம், அங்கிருந்த சேவை நிறுவனத்துடன் இணைந்து அதற்கான தீர்வைக் கண்டறிய தீர்மானித்தது. அவர்கள் மீந்த உணவுகளை பொட்டலமாகக் கட்டி மாணவர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கையில் கொடுத்தனுப்பினர். உணவு வீணாவது மற்றும் பசி ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு கண்டனர்.

அதிகமான உணவை நாம் வீணாகப் பார்ப்பதுபோல், அதிகமான பணத்தை மக்கள் வீண் என்று எண்ணுவதில்லை. அந்த பள்ளி நிர்வாகம் தீர்வு கண்டதற்கு பின்பாக இருக்கும் அதே கொள்கையை பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் வலியுறுத்துகிறார். மக்கதொனியாவில் உள்ள திருச்சபைகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர்களுடைய செல்வத்தை தந்து உதவுமாறு கொரிந்து சபையை பவுல் ஊக்கப்படுத்துகிறார் (2 கொரிந்தியர் 8:14). அவருடைய நோக்கம் திருச்சபைகளுக்கிடையேயான நல்லுறவை பலப்படுத்துவதேயாகும். ஆகையால் ஒருவர் கஷ்டப்படும்போது, மற்றவர்கள் அதிக செல்வத்தை அனுபவிப்பதை அவர் விரும்பவில்லை.

கொரிந்திய திருச்சபை மக்கள் தங்களுடையதை கொடுத்துவிட்டு வறுமையில் வாடவேண்டும் என்று பவுல் எதிர்பார்க்கவில்லை. மாறாக, எதிர்காலத்தில் அவர்களுக்கும் இதே போன்ற பணத்தேவை ஏற்படலாம் என்பதை உணர்ந்து, மக்கதோனியர்களின் இக்கட்டில் அவர்களுக்கு தாராளமாய் கொடுத்து உதவும்படி ஊக்குவிக்கிறார். தேவையில் இருப்பவர்களை நாம் பார்க்கும்போது, அவர்களுக்கு ஏதாகிலும் உதவிசெய்ய முடியுமா என்று நாம் நிதானிப்போம். நாம் கொடுப்பது பெரியதோ அல்லது சிறியதோ, அது ஒருபோதும் வீணாகாது!